சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஜம்மு காஷ்மீரில் இருந்து தேர்வான 16 ஆண்களில் ஒரே ஒரு பெண் தேர்ச்சி பெற்றிருப்பது பாராட்டுகளை குவித்துவருகிறது. 23 வயதாகும் நாடியா தனது இரண்டாவது முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார். ஜம்மு காஷ்மீரின் குத்வாரா எல்லைபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாடியா 350-வது இடத்தை பிடித்துள்ளார். இவர், 12 ஆம் வகுப்புவரை அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார் என்பது கூடுதல் தகவல்.
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் குறித்த பட்டப்படிப்பை முடித்து கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து டெல்லியிலேயே தங்கி சிவில் சர்வீஸ் தேர்விற்கு படித்துள்ளார். காஷ்மீரின் இணையக்கட்டுப்பாடுகள் மற்றும் பல்வேறு சிரமங்கள் காரணமாக டெல்லியில் தங்கி படித்துள்ளார்.
இதுகுறித்து, தேர்ச்சிபெற்ற நாடியா கூறும்போது, “கடந்த, 2018 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் முயற்சித்தேன். ஆனால், தோல்வியடைந்தேன். அதற்காக, நான் சோர்ந்து போகவில்லை. 2019 ஆம் ஆண்டு மீண்டும் முயற்சித்தேன். அதற்கான, வெற்றி கிடைத்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது தொடர்ச்சியாக 25 நாட்கள் எனது பெற்றோரை தொடர்புகொள்ளக்கூட முடியாத காலக்கட்டம் மிகக் கொடூரமானது. இதுபோன்ற, பல்வேறு இடற்பாடுகளை கடந்துதான் படித்து தேர்ச்சி பெற்றேன்” என்கிறார்.