கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் வாடிகன் திருச்சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பாதிரியார் ஃப்ராங்க்கோ முல்லக்கல் என்பவர், கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி கன்னியாஸ்திரிகள் ஐவர் நடத்தி வரும் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்ந்தது. இந்திய திருச்சபை தலைவர்கள் மவுனம் காத்து வருவதால் திருச்சபைகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர், தேவாலய அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பிலும் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் இந்த விவகாரத்தில் வாடிகன் திருச்சபை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாஸ்திரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதிப்புக்குள்ளான கன்னியாஸ்திரி இந்தியாவில் உள்ள வாடிகன் திருச்சபையில் கிளைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து தன்னிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதாகத் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்குள்ளான பாதிரியார் ஃபிரான்கோ மூலக்கல், கன்னியாஸ்திரிகளின் போராட்டத்திற்குப் பி்ன்னணியில் திருச்சபைக்கு வேண்டாதவர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.