இந்தியா

கொரோனா எதிரொலி : தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு?

webteam

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

சீனா, ஈரான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களின் விசா தற்காலிகமாக தடை செய்யப்பட்டதன் எதிரொலியாக சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு சரிந்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட நடப்பு வாரத்தில் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு வந்த இத்தாலி நாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆக்ராவில் பல விடுதிகளில் செய்யப்பட்ட முன்பதிவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விரின்தாவன் நகரில் உள்ள இஸ்கான் கோயிலில் நடைபெறும் ஹோலி கொண்டாட்டத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் உள்ள புத்த கயா உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. நாட்டிலேயே முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட மாநிலமான கேரளாவில், சுற்றுலா மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் அதிகளவில் சரிந்துள்ளது. பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும் விதமாக, சுற்றுலா தலங்களில் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.