இந்தியா

பக்தர்கள் கூட்டத்தால் திணறும் சபரிமலை - 27 நாளில் எத்தனை லட்சம் பேர் சுவாமி தரிசனம்?

webteam

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் தற்போது வரையிலான 27 நாட்களில் பக்தர்களின் தரிசன எண்ணிக்கை 16 லட்சம் கடந்துள்ளது. அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திணறி வருகிறது சபரிமலை.

சபரிமலையில் கொரோனா பொது முடக்க காலமான  மூன்றாண்டுகளுக்கு பின் முழுத் தொடர்புகளுடன் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணமே உள்ளது. தினசரி சராசரியாக 70 ஆயிரம் முதல் ஒரு லட்சத்தை நெருங்கும் அளவிற்கு பக்தர்கள் எண்ணிக்கை உள்ளது.

இந்நிலையில் சபரிமலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று  (11.12.22) 62,247 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில் 77 ஆயிரத்து 537 பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று திங்கட்கிழமை (12.12.22) முதன் முறையாத அதிகபட்சமாக 1,19,480 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் காலை 11 மணி வரை 38,967 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலையில் இந்த ஆண்டு நடை திறக்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி முதல் இன்று (12.12.22) வரையிலான 27 நாட்களில் 18 லட்சத்து 15 ஆயிரத்து 113 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் இதுவரை 16 லட்சத்து 20 ஆயிரத்து 433 பேர் தரிசனம் செய்துள்ளனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் திணறி வருகிறது சபரிமலை சன்னிதானம். இதையடுத்து பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை படுத்தும் பணிகள் கேரளா அரசு துறைகள் சார்பிலும் திருவிதாங்கூர் தேவஸம் போர்டு சார்பிலும் முடுக்கி விடப்பட்டுள்ளன