செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் நவம்பர் 16ம் தேதி துவங்கியது. இதையடுத்து தற்போது வரையிலான 34 நாட்களில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் (19.12.24) வியாழக்கிழமைதான் அதிக அளவிலான (96,007) பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று (டிசம்பர் 20) மாலை 5 மணி வரை மட்டும் 70, 964 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
நடை சார்த்தப்படும் இரவு 11 மணிக்குள் பக்தர்கள் தரிசன எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. "ஸ்பாட் புக்கிங்"கில் டிசம்பர் 19ம் தேதி மட்டும் 22,121 பேர் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்துள்ளனர். இந்த பூஜைக் காலத்தில் இதுவரை 4,46,130 பேர் ஸ்பாட் புக்கிக் மூலம் ஐயப்பனை தரிசித்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்தாலும், தரிசனம் செய்வதற்கும், பக்தர்கள் சிரமமின்றி ஐயப்பனை தரிசிப்பதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரிசை நீண்டு கொண்டே சென்றாலும், நெரிசல் மற்றும் காத்திருப்பு இல்லாமல் பக்தர்கள் மகிழ்வோடு தரிசனம் செய்து திரும்பும் நிலை உருவாகியுள்ளது.
பக்தர்கள் கூட்டம் அலைமோதினாலும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமலும், பக்தர்கள் எந்த இடத்திலும் நிறுத்தப்படாமல், இனிமையான தரிசனத்தை உறுதி செய்துள்ளதாக சபரிமலை சன்னிதான தனி அலுவலர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்