இந்தியா

பாஜக தேசிய செயற்குழு கூட்டம்: பிரதமர் மோடி இன்று உரை

JustinDurai

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவில் 2024 ஆம் ஆண்டு  தேர்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, நேற்று தனி விமானத்தில் ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடியின் வரவேற்பில் மாநில முதலமைச்சரும் , தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர ராவ் கலந்துகொள்ளவில்லை.

திட்டமிட்டபடி, பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் மாதாப்பூர் சர்வதேச கன்வென்சன் சென்டரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில், ஒரு அரசியல் தீர்மானமும், ஒரு பொருளாதார தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது என கட்சியின் தேசிய துணைத்தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா தெரிவித்தார். குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான திட்டங்கள், உத்திகள் தொடர்பாக அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் , கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உக்ரைன்-ரஷ்யா போருக்குப் பிறகு ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசின் முயற்சிகளை விவரிக்கும் பொருளாதாரத் தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணி மணிக்கு முடிவடையவுள்ளது . அதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள  பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

இதையும் படிக்கலாம்: தெலங்கானா சென்ற பிரதமர் மோடி - மீண்டும் ஆப்சென்ட் ஆன சந்திரசேகர ராவ்!