ஒரு நல்ல மனிதன் ஆவதற்கு மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை என்று பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமா உலகில் சிறந்த நடிகராக வலம் வருபவர் ஜான் ஆப்ரஹாம். அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். தந்தை ஆப்ரஹாம் ஜான் கத்தோலிக்க பிரிவை சார்ந்தவர், தாய் பிரோஸா இரானி ஜோரோஸ்ட்ரிய (Zoroastrian) மத நம்பிக்கை உடையவர். இவர் மதம் தொடர்பாக சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஜான் ஆப்ரஹாம் கூறிய போது, “இந்த மதத்தைதான் பின்பற்ற வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நான்கு வயதாக இருக்கும் போது, எந்த மதத்தையும் பின்பற்ற வேண்டாம் என்று எனது தந்தை என்னிடம் கூறினார். நீங்கள் உண்மையில் பிரார்த்தனை செய்ய விரும்பினால், கோயிலுக்கு, மசூதிக்கு, குருத்வாராவுக்கு செல்ல விரும்பினால், மனிதகுலத்திற்கு சேவை செய்யுங்கள். அதுதான் வழி.
ஒரு நல்ல மனிதன் ஆவதற்கு மத வழிபாட்டு இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. நல்ல விஷயங்கள் செய்தால்தான் நல்ல மனிதராக முடியும். தீவிர மதவாதத்தினர், மிகவும் ஆபத்தான மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால், நீங்கள் மதம் தொடர்பான விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது. உங்கள் வாழ்க்கையை சரி செய்து கொள்ள மத வழிகாட்டுதல்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல பழக்கங்களை பின்பற்றுங்கள். அனைவருக்கும் நல்லவராக இருப்பதே மிக முக்கியமான பழக்கம்” என தெரிவித்துள்ளார்.