இந்தியா

உலகின் அதிக மாசடைந்த தலைநகரம்; தொடர்ந்து 2வது வருடமாக முதலிடத்தில் டெல்லி!

webteam

உலகின் அதிக மாசடைந்த தலைநகரங்களுக்கான காற்று தர அறிக்கையில் தொடர்ந்து 2வது வருடங்களாக இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது.

காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி, பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த நிலையில் முழுவதும் சுமார் 6,475 நகரங்களில் மாசு தரவுகளின் கணக்கெடுப்பை சுவிஸ் மாசு தொழில்நுட்ப நிறுவனம் நடத்தியது. அதன்படி 93 நகரங்களில் உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 10 மடங்கு அதிக மாசுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

உலகின் மிகவும் காற்று மாசுபட்ட தலைநகரமாக இந்தியாவின் புதுடெல்லி உள்ளது. அதேபோல் உலகின் அதிக காற்று மாசுபாட்டை உடைய நாடாக வங்காளதேசம் உள்ளது. அதிக மாசடைந்த நகரங்களுக்கான பட்டியலில் டெல்லி 4வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ராஜஸ்தானின் பிவாடி உள்ளது. நகரங்களுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் 63 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் 15 இடங்களில் 10 இடங்களை இந்திய நகரங்களே இடம்பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் தலைநகர் டெல்லியை சுற்றி அமைந்துள்ள நகரங்கள் ஆகும்.

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த அளவை விட 10 மடங்கு அதிக மாசு நிறைந்த நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. டெல்லியில் கடந்தாண்டு இருந்த மாசின் அளவை விட இந்தாண்டு 15 சதவீதம் மாசு அதிகரித்து இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களும் அதிக மாசு அடைந்துள்ளன. பெருநகரங்களில் சென்னை மட்டுமே கடந்தாண்டை விட குறைவான மாசு அளவை பதிவு செய்துள்ளது. இந்தியா சார்பில் குறைவான மாசடைந்த நகரம் தமிழ்நாட்டில் தான் அமைந்துள்ளது. அரியலூர் தான் அந்த குறைந்த மாசு கொண்ட நகரம்!