வகுப்பறையில் தனது 2 வயது சகோதரியை மடியில் படுக்க வைத்துக் கொண்டு பாடம் கவனிக்கும் சிறுமியின் புகைப்படம் வைரலானதை அடுத்து அவரை மணிப்பூர் மின்சக்தி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிஸ்வஜித் சிங் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
மணிப்பூர் மாநிலத்தின் தமெங்லாங் பகுதியை சேர்ந்த மெயினிங்லினு பமேய் என்ற பத்து வயது சிறுமி 2 வயதான தனது சகோதரியை பள்ளிக்கு அழைத்து சென்று பாடம் கவனிக்கும் சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் வகுப்பறையில் தனது சகோதரியை மடியில் படுக்க வைத்துக் கொண்டு பாடம் கவனிக்கும் சிறுமியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. சிறுமியின் பெற்றோர் குடும்ப சூழல் காரணமாக விவசாயம் மற்றும் இதர பணிகளுக்கு சென்று விட்டதால் தனது இரண்டு வயதான சகோதரியை பள்ளிக்கு அழைத்து சென்று இருக்கிறார். பள்ளி நேரத்தில் சகோதரியை பார்த்துக் கொண்டே பாடம் கவனிக்கும் சிறுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
சிறுமியின் புகைப்படம் மணிப்பூர் மின்சக்தி, வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிஸ்வஜித் சிங் வரை சென்றடைந்து இருக்கிறது. புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட அமைச்சர் பிஸ்வஜித், "கல்வியின் மீது இந்த சிறுமி வைத்திருக்கும் அர்ப்பணிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது! இந்த செய்தியை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். செய்தி அறிந்ததும் சிறுமியின் குடும்பத்தாரை தேடி கண்டுபிடித்து, இம்பால் அழைத்து வர கூறியிருந்தேன். அதேபோன்று அவர்களின் குடும்பத்தாருடன் பேசி, சிறுமி பட்டப்படிப்பு வரையிலான கல்வி செலவை முழுமையாக ஏற்றுக் கொள்வேன் என தெரிவித்து இருக்கிறேன். சிறுமியின் அர்ப்பணிப்பு பெருமையாக உள்ளது!" என குறிப்பிட்டு இருந்தார்.
இன்று தனது இல்லத்தில் சிறுமியை அவரது பெற்றோருடன் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் அமைச்சர் பிஸ்வஜித் சிங். துணிச்சலான பெண்ணை சந்தித்தாக டிவிட்டரில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அமைச்சர். முந்தைய பதிவில் குறிப்பிட்டதைப் போல அந்தச் சிறுமி பட்டப்படிப்பு முடிக்கும் வரை அவளுடைய எல்லா செலவுகளையும் தான் பார்த்துக் கொள்வதாக அவளுடைய பெற்றோருக்கு மீண்டும் உறுதியளித்தார் அமைச்சர் பிஸ்வஜித் சிங்.