இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

webteam

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமாக உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக 109 இடங்களில் வெற்றி கண்டுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சமாஜ் வாதி 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதுதவிர சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

இதனையடுத்து ம.பியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பகுஜன் சமாஜ் அறிவித்துள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் பலம் 117 ஆக அதிகரிக்கும். எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்‌க காங்கிரஸ் கட்சி உரிமைக்கோரியது. ஆட்சியமைக்க 116 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில் தங்களுக்கு 121 எம்.எல்.ஏக்களின் ஆதரவு‌ இருப்பதாக ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் காங்கிரஸ் கட்சி கடிதம் அளித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. மேலும் மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சிவராஜ் சிங் சவுகான் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.