Air India Flight ANI
இந்தியா

36,000 அடியில் பெரும் பரபரப்பு.. ஏர் இந்தியா பயணிகள் ஷாக்.. முக்கிய தொழில்நுட்பம் செயலிழப்பு!

ஆகஸ்டு 4-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தின்போது, நடுவானில் பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென 3 ஹைட்ராலிக் அமைப்புகள் செயலிழந்ததாக கூறப்படுகிறது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

137 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன், தாய்லாந்து நாட்டின் பூகெட் பகுதியில் இருந்து டெல்லி நோக்கி ஏர் இந்திய விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானம் நடுவானில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென 300 அடிக்கு கீழே இறங்கி, பெரும் விபத்து ஏற்பட்டது.

Air India Flight

இந்த விபத்தின்போது, விமானம் திடீரென குலுங்கியதால் சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்த பயணிகள் சிலர் விமானத்தின் கூரையின் மீது மோதி படுகாயம் அடைந்தனர். கிட்டத்தட்ட 13 பயணிகளும், 4 விமான ஊழியர்களும் படுகாயம் அடைந்ததாக சொல்லப்பட்டது.

கடந்த ஆகஸ்டு 4-ஆம் தேதி ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தற்போதுவரை, தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, விமானத்தை இயக்கிய விமானி போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் கூறி, அவரைப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கியிருப்பதாகவும் ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 36 ஆயிரம் அடியில் விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதன் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் திடீரென செயலிழந்துவிட்டது என்றும், பின்னர் அவை மீட்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.

அதாவது, விபத்துக்குள்ளான ஏ320 ரக விமானத்தில், பச்சை, மஞ்சள், நீலம் ஆகிய மூன்று ஹைட்ராலிக் அமைப்புகள் உள்ளன. இந்த ஹைட்ராலிக் அமைப்புகள், விமானத்தின் மீது விழும் அதிகப்படியான காற்று அழுத்தங்களை சீரமைக்க பயன்படுகிறது. விமானத்தின் லேண்டிங் கியர்கள், பிரேக்குகள் போன்றவற்றைத் திறக்கவும் மூடவும் ஹைட்ராலிக் அமைப்புகளே உதவுகின்றன.

Air India Flight

இந்த ஏர் இந்தியா விமான விபத்தின்போது, பச்சை நிற ஹைட்ராலிக் அமைப்பு திடீரென செயலிழந்துவிட்டது என்றும், அடுத்த 4 விநாடிக்குள் நீலம் மற்றும் மஞ்சள் நிற அமைப்புகளும் செயலிழந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது.

இதுவும் விமான விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து விமானப் போக்குவரத்து விபத்து விசாரணைப் பிரிவு தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த விசாரணைப் பிரிவு, தனது இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.