சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு தண்டனை அறிவிப்பைச் செய்ய இருக்கும் நீதிபதி நேரடியாக ரோட்டாக் சிறைக்கே விமானம் மூலம் வருவற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பஞ்ச்குலா மாவட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் 32 பேர் பலியாகினர். இந்நிலையில் குர்மீத் ராம் ரஹீமிற்கு திங்களன்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது.
இது தொடர்பான விசாரணை நடத்த குர்மீத் அடைக்கப்பட்டுள்ள ரோட்டாக் சிறையிலேயே ஒரு கோர்ட் வளாகத்தை அமைக்க வேண்டும் என்றும் அங்கு வழக்கறிஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்பாக வர ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் ஹரியானா அரசுக்கு பஞ்சாப் ஹரியான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை நடத்த உள்ள சிபிஐ நீதிபதி ஜகதீப் சிங் மற்றும் அவரது அலுவலர்கள் இருவர் ரோட்டாக் மாவட்ட சிறைச்சாலைக்கே நேரடியாக விமானம் மூலம் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குர்மீத் ராம் ரஹீமுக்கு தண்டனை விபரத்தை அறிவிப்பதற்கான நீதிபதி விமானம் மூலம் நேரடியாக திங்களன்று ரோட்டாக் சிறைக்கு வருகிறார். பலத்த வன்முறை நிகழ்ந்து வரும் சூழ்நிலையில், நீதிபதியின் பாதுகாப்பு கருதி பஞ்சாப் ஹரியான உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.