இந்தியா

மகரசங்கராந்தி பட்டம்.... மாஞ்சா, நைலன் நூல்களுக்குத் தடை..

webteam

தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், வட மாநிலங்களில் மகரசங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தப் பண்டிகையின் போது பட்டம் விடுவது வழக்கம். இந்நிலையில் மும்பையில் நாளை கொண்டாடப்படும் மகரசங்கராந்தி பண்டிகையின் போது பட்டம் விடுவதற்கு நைலான் நூல் பயன்படுத்தக் கூடாது என காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே பட்டம் பறக்க விடுவதற்கு கண்ணாடி தூள் கலந்த மாஞ்சா நூலை பயன்படுத்த கூடாது என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பட்டம் பறக்க விடுவதற்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடித் துகள்கள் கலந்த சீன மாஞ்சா நூல்கள் மற்றும் நைலான் நூல்களுக்குத் தடை விதித்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தடையை நீக்க வேண்டும் எனக் கோரி குஜராத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோக்கூர், ப்ரபுல்லா சி பந்த் ஆகியோரைக் கொண்ட அமர்வு, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாஞ்சாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.