IndiGo flight Reuters
இந்தியா

கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து.. தூணில் மோதிய IndiGo விமானம்.. Landing-ல் திடீர் விபரீதம்!!

நவி மும்பை–ஸ்ரீநகர் இண்டிகோ 6E 225 விமானம், பார்க்கிங் செய்யும்போது VDGS வழிகாட்டி தூணில் மோதியது. விமானம் சேதமடைந்த நிலையில், பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

இந்தச் சம்பவத்தில் விமானம் சேதமடைந்த போதிலும், பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமான நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகளும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையமான AAI வெளியிட்ட அறிக்கையில், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும், விமானக் குழுவினரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்துக்கான உண்மையான காரணம் விசாரணை நிறைவடைந்த பின்னரே தெரியவரும் என்றும், அதற்கு முன்பாக எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது என்றும் AAI குறிப்பிட்டுள்ளது.

IndiGo flight

விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் குழுவினர், வழக்கமான விமானப் படிக்கட்டுகளுக்குப் பதிலாக, கையால் பொருத்தப்பட்ட படிக்கட்டுகள் மூலம் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கு வழிவகுத்த காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து உரிய அதிகாரிகள் விதிமுறைகளின்படி விசாரணை நடத்துவார்கள் என்றும் AAI தெரிவித்துள்ளது.

இதனிடையே, விமானம் தூணில் மோதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் விமானம் தூணை உரசியபடி மோதியிருப்பது தெரிகிறது. விமானத்தின் வேகம் சரியான நேரத்தில் போதிய அளவு குறைக்கப்படாததால் மோதல் ஏற்பட்டிருக்கலாம் என காட்சிகளின் அடிப்படையில் கூறப்படுகிறது. எனினும், இதை உறுதி செய்ய அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாக வேண்டும்.

இந்தச் சம்பவம் இந்திய விமானத் துறை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில் நடந்துள்ளது. இதற்கிடையே, கடந்த ஆண்டு ஏர் இந்தியா விமானம் 171 விபத்துக்குள்ளான சம்பவத்தின் விசாரணையும் இன்னும் நிறைவடையவில்லை. அதன் முதற்கட்ட அறிக்கையில் பல கேள்விகள் எழுந்த நிலையில், இறுதி அறிக்கையிலேயே விபத்துக்கான உறுதியான காரணங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.