இந்தியா

குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தின் பெயர் திடீர் மாற்றம்!

webteam

நூற்றாண்டு பழமையான குடியரசு தலைவர் மாளிகை முகல் கார்டன் என்று அழைக்கப்படும் தோட்டத்தின் பெயரை அம்ரித் உதியான் என மாற்றப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் அமைந்துள்ள முகல் தோட்டம் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸால் அமைக்கப்பட்டது. இங்கு ரோஜா, டஹ்லியா உள்ளிட்ட பல வகையான மலர்களும் விதவிதமான மரங்களும் வைத்து பராமரிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரியில் குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே பொதுமக்களுக்காக திறக்கப்படும். குடியரசு தலைவர் அவ்வப்போது வழங்கும் விருந்து உள்ளிட்ட சில முக்கிய நிகழ்ச்சிகளும் இந்த தோட்டத்தில் நடைபெறும்.

பல நூறு ஆண்டு வரலாற்றை கொண்ட முகல் தோட்டம் எனும் பெயர் அம்ரித் உத்யன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் இந்தப் பெயரை மாற்றியுள்ளதாக அவரது துணை செய்தி தொடர்பாளர் நிகிதா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டை ஒட்டி இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகைகளை தோட்டத்தில் வைத்துள்ள அதிகாரிகள் ஜனவரி 31 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை, பொதுமக்கள் ஆன்லைனில் நுழைவுச் சீட்டுகளை பெற்று பார்வையிடலாம் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்தியா கேட்டுடன் குடியரசு தலைவர் மாளிகையை இணைக்கும் ராஜ பாதை எனும் பெயர் கடமை பாதை என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.