single house in Delhi-Dehradun highway web
இந்தியா

நெடுஞ்சாலைக்கு நடுவே வீடு.. தாத்தா முதல் பேரன் வரை தொடரும் சட்டப்போராட்டம்!

சீனாவில் நெடுஞ்சாலைகளுக்கு நடுவே பிடிவாதமாக அகற்றப்படாமல் இருக்கும் வீடுகளை 'நெயில் ஹவுஸ்' என்று அழைப்பார்கள். அதே போன்ற ஒரு சூழல் தற்போது இந்தியாவிலும், குறிப்பாக டெல்லி-டெஹ்ராடூன் விரைவுச் சாலையில் உருவாகியுள்ளது.

PT WEB

சீனாவில் யே யுஷோவின் வீடு இழப்பீட்டு விவகாரத்தில் அரசுடன் மோதியதால், நெடுஞ்சாலையின் நடுவே சிக்கிய ‘நெயில் ஹவுஸ்’ ஆக மாறியது. இந்தியாவில், மண்டோலா கிராமத்தின் ‘சுவாபிமான்’ வீடு, டெல்லி-டெஹ்ராடூன் விரைவுச்சாலையின் நடுவே நான்கு பக்கமும் சாலையால் சூழப்பட்ட நிலையில், உரிமையாளர்கள் சந்தை விலைக்கு ஏற்ற இழப்பீட்டை கோரி உச்ச நீதிமன்றத்தில் நீண்டகால சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2025-ஆம் ஆண்டு, சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஜி206 நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக யே யுஷோ( Ye Yushou ) என்ற நில உரிமையாளரின் வீட்டை அரசு கையகப்படுத்த முயன்றது. அரசு வழங்கிய 1.6 மில்லியன் யுவான் இழப்பீட்டை ஏற்க மறுத்த யுஷோ, கூடுதல் பணம் மற்றும் மூன்று மாற்று இடங்களைக் கேட்டார். அரசு பணியவில்லை; மாறாக, அவரது வீட்டைச் சுற்றி சாலையை வளைத்துத் திட்டத்தை முடித்தது.

nail house in china

இன்று போக்குவரத்து நெரிசல், இரைச்சல் மற்றும் தனிமைக்கு நடுவே சிக்கிக்கொண்ட யுஷோ, "இது ஒரு தவறான சூதாட்டம்" என வருந்துகிறார். இப்போது அவருக்கு இழப்பீடும் இல்லை, நிம்மதியான வாழ்க்கைச் சூழலும் இல்லை.

இதே போன்ற ஒரு நிலை உத்தரபிரதேசத்தின் காசியாபாத் அருகே உள்ள மண்டோலா Mandola கிராமத்தில் ஏற்பட்டுள்ளது.

சுமார் 13,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 213 கிலோமீட்டர் நீளமுள்ள டெல்லி-டெஹ்ராடூன் விரைவுச் சாலை, பயண நேரத்தை 6 மணி நேரத்திலிருந்து 2.5 மணி நேரமாகக் குறைத்துள்ளது. ஆனால், இந்தச் சாலையின் சர்வீஸ் சாலை அமைய வேண்டிய இடத்தில் 'சுவாபிமான்' (சுயமரியாதை) என்ற வீடு கம்பீரமாக நிற்கிறது. மறைந்த டாக்டர் வீர்சென் சரோகா (Dr Veersen Sorah) 1998-ல் வீட்டுவசதி வாரியத்திற்கு எதிராகத் தொடங்கிய சட்டப் போராட்டம், தற்போது அவரது பேரன் லக்ஷ்யவீர் சரோகா மூலம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த இடத்தில் 'யதாஸ்திதி' காக்க உத்தரவிட்டுள்ளது. அதாவது, வீட்டை இடிக்கவோ அல்லது அங்கு மேற்கொண்டு கட்டுமானங்கள் செய்யவோ முடியாது.

single house in Delhi-Dehradun highway

"தற்போதைய நில சந்தை விலைக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும், இல்லையெனில் நிலத்தைத் தர முடியாது" என்பதில் உரிமையாளர்கள் உறுதியாக உள்ளனர். சுமார் 1,600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இரண்டு அடுக்கு மாடி வீடு, தற்போது நான்கு பக்கமும் சாலையால் சூழப்பட்டுத் தனித்து விடப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் நோய்டாவில் வசிக்க, ஒரு பாதுகாவலர் மட்டுமே வீட்டைப் பராமரித்து வருகிறார். "வாகனங்களின் இரைச்சல் தாங்க முடியவில்லை" என்கிறார் அந்தப் பாதுகாவலர்.

single house in Delhi-Dehradun highway

சீனாவின் 'நெயில் ஹவுஸ்' உரிமையாளர் இறுதியில் வருத்தப்பட்டார். அதேபோல இந்தியாவின் 'சுவாபிமான்' இல்லத்தின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்குமா அல்லது அதுவும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அடையாளமாக மாறுமா என்பதை நீதிமன்றத் தீர்ப்பே முடிவு செய்யும்.