பஞ்சாபில் உள்ள அஜ்னாலா நகரில் பல நூற்றாண்டுகள் பழமையான அஜ்னாலா என்ற கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு பின் உள்ள வரலாறு என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
அஜ்னாலாவில் உள்ள இந்த கிணற்றைப்பற்றி நாங்கள் உங்களுக்கு ஏதும் கதைக் கூறப்போவதில்லை... மாறாக, வரலாற்றை சொல்லப்போகிறோம். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சுரிந்தர் கோச்சார் என்ற வரலாற்று ஆய்வாளர்தான் இந்த கிணற்றை கடந்த காலத்தில் வெளி உலகுக்கு அறியவைத்தார். அதைப்பற்றியே தற்பொழுது இங்கே கூற உள்ளோம்.
அஜ்னாலா என்பது பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமம். இங்கு 1857 முதல் இந்திய சுதந்திரப்போராட்டத்தின் போது, ஆங்கிலேயரை எதிர்த்து 282 இந்தியர்கள் கலகம் செய்தனர். பின்னர் தங்களுக்கு நியாயமான விசாரணை வழங்கப்படும் என்று நம்பி ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள், அவர்கள் அனைவரையும் கொன்று அவர்கள் உடலிலிருந்து நாற்றம் வராமல் இருக்க சுண்ணாம்பையும் கரியையும் பூசி அந்த உடல்களை அங்கிருந்த கிணற்றில் வீசியுள்ளனர்.
வரலாற்று ஆய்வாளர் சுரிந்தர் கோச்சார், முதல் சுதந்திரப்போரின் போது அமிர்தசரஸ் துணை ஆணையராக இருந்த ஃபிரடெரிக் ஹென்றி கூப்பர் எழுதிய the crisis in the punjab என்ற புத்தகத்த படித்த பிறகு கிணற்றை தேடி வந்துள்ளார். அவரின் தேடுதலின் பலனாக 2014ல் அஜ்னாலா கிணற்றை கண்டுபிடித்து அதை ஆராய்ந்த பொழுது மண்ணோடு மண்ணாக மக்கிய நிலையில் 280 எலும்பு கூடுகள் கிடைத்துள்ளன.
இத்துடன் பிரிட்டிஷ் இந்திய ராணுவப்பதக்கங்கள், கிழக்கிந்தியக் கம்பெனி வழங்கிய நாணயங்கள் ஆபரணங்கள் போன்றவையும் இருந்துள்ளன. இருப்பினும் இந்த எலும்பு கூடுகள் இந்தியர்களுடையதுதானா என்ற சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள... அதை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்
டிஎன்ஏ சோதனையில் அவை அனைத்தும் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 26வது வங்காள காலாட்படை பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. வரலாற்று பதிவுகளின் படி அவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தானின் மியான்மரில் பணியமர்த்தப்பட்டனர்.
DNA சோதனைக்கு பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய இந்த துணிச்சலான மனிதர்களின் எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு மரியாதைக்குரிய இறுதி சடங்குகள் செய்யப்பட்டன!