மேகாலயாவின் ரோங்குச்சோங் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த தனது தோழியை காக்க உதவ முயன்றபோது ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அந்த சிறுமி தனது மூன்று நண்பர்களுடன் ரோங்குச்சோங் கிராமத்திற்கு பக்கத்திலுள்ள தரம் குராக்கோல் நீர்வீழ்ச்சிக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுமி மீமா பாட்டியாசா என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த சிறுமியோடு சென்ற தோழிகளில் ஒருவர் நீர்வீழ்ச்சியின் விளிம்பிற்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது தடுமாறி தண்ணீரில் விழுந்துள்ளார். அதை கண்ட சிறுமி மீமா தனது உயிரை பற்றி துளியும் கவலை கொள்ளாமல் தனது தோழியை காக்க நீரில் குதித்து தோழியை காப்பாற்றி உள்ளார்.
ஆனால் அவர் தப்ப முயன்றபோது ஆற்று நீரில் மூழ்கி இறந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் ஆற்றின் கீழ் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மீமாவின் வீரதீர செயலை நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர் அவரது கிராம மக்கள்.