இந்தியா

'அவள் எனக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை!' - நெகிழவைக்கும் 82 வயது முதியவரின் முதல் காதல்

webteam

ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தின் மையத்தில் இருக்கிறது குல்தாரா. இந்த நகரத்தில் 82 வயதான ஒரு நுழைவாயில் காவலர் (கேட் கீப்பர்) பணியில் இருக்கிறார். அவரின் முதல் காதல் கதையை பற்றிதான் இங்கே பார்க்கப் போகிறோம்.

1970-களில் இது நடந்தது. அப்போது இந்த முதியவர் காவலராக இல்லை. ஒட்டகம் வளர்க்கும் பணியில் இருந்துள்ளார். அந்த சமயத்தில்தான் ஆஸ்திரேலியாவில் இருந்து மெரினா என்ற பெண் ஜெய்சால்மருக்கு ஒரு பாலைவன சஃபாரிக்கு வந்திருக்கிறார். மெரினாவுக்கு பாலைவன சஃபாரிக்கான கைடு நம் முதியவர்தான். இப்போதுதான் அவர் முதியவர். அப்போது அவருக்கு 30 வயது மட்டுமே. இளமை ததும்பும் வயது இருவருக்கும். இதனால் முதல் பார்வையிலேயே இருவருக்கும் காதல் தொற்றிக்கொள்கிறது.

மெரினாவின் ஐந்து நாள் பயணத்தின்போது, ஒட்டகத்தை எப்படி சவாரி செய்வது என்று கற்றுக் கொடுத்தார் அவர். ஆனாலும் இருவரும் வெகுவாக பேசிக்கொள்ளவில்லை. காதலுக்கு பேச்சுக்கள் அவசியமா என்ன? ஆம், நாம் நினைப்பதுதான் கடைசியில் நிகழ்ந்தது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன்பு, மெரினா தனது உணர்வுகளை ஒப்புக்கொண்டு, முதல் பார்வையில் மலர்ந்த காதலை உணர்ந்து காவலரிடம் காதலை சொல்லி இருக்கிறார்.

இதன்பின் நடந்ததை அந்த முதியவர் மொழியிலேயே படியுங்கள்... "நான் மெரினாவை முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு 30 வயது. அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து ஜெய்சால்மேருக்கு ஒரு பாலைவன சஃபாரிக்கு வந்திருந்தார். இது ஐந்து நாள் பயணம், நான் அவளுக்கு ஒட்டகத்தை சவாரி செய்ய கற்றுக் கொடுத்தேன். எங்கள் இருவருக்கும் இது முதல் பார்வையில் காதல். பயணம் முழுவதும், கண்களால் பேசிக்கொண்டோம்.

ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன்பு, மெரினா என்னிடம் மூன்று மந்திர வார்த்தைகளைச் சொன்னார். ஆம் அது, 'ஐ லவ் யூ' என்ற மந்திர வார்த்தைதான். அந்த வார்த்தைகளை யாரும் இதற்கு முன்பு என்னிடம் சொல்லவில்லை. அந்த நாளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவளுடைய வார்த்தை என்ன சிவக்க வைத்தது. வெட்கப்பட வைத்தது. என்னால் ஒரு வார்த்தையும் சொல்ல முடியாத அளவுக்கு வெட்கப்பட்டேன்.

ஆனால், எனக்கும் காதல் இருக்கிறது என்பதை அவள் புரிந்துகொண்டாள். அவள் ஆஸ்திரேலியா திரும்பிச் சென்ற பிறகும் நாங்கள் இருவரும் தொடர்பில் இருந்தோம். அவள் ஒவ்வொரு வாரமும் எனக்கு கடிதம் எழுதுவாள். சில வாரங்களுக்குப் பிறகு, அவள் என்னை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்தாள். எனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல், நான் ரூ.30,000 கடன் வாங்கினேன், மெல்போர்னுக்கு ஒரு டிக்கெட் வாங்கினேன், விசாவிற்கு ஏற்பாடு செய்தேன், அவளுடன் இருப்பதற்காக விமானத்தில் பறந்தேன்.

அந்த 3 மாதங்கள் மாயாஜாலமாக இருந்தன. அவள் எனக்கு ஆங்கிலம் கற்பித்தாள். நான் அவளுக்கு கூமர் செய்ய கற்றுக் கொடுத்தேன். ஆனால் அவள் சொன்னாள், 'திருமணம் செய்து ஆஸ்திரேலியாவில் குடியேறலாம்' என்று. இங்குதான் சிக்கல்கள் வந்தன. நான் என் தாய்நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இல்லை, அவள் இந்தியா வர விரும்பவில்லை. நான் அவளிடம் 'இது நீண்ட காலத்திற்கு சரிப்பட்டு வராது' என்றேன்.

நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தோம். இது எளிதானது அல்ல. ஆனால் அதுதான் எங்களுக்கு இருந்த வழி. நான் சென்ற நாளில் அவள் நிறைய அழுதாள். வேதனையை மறைத்து நான் அவளை விட்டு விலக வேண்டி இருந்தது. பின்னர், வாழ்க்கை நகர்ந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, குடும்ப அழுத்தம் காரணமாக, நான் திருமணம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. பின்னர், எனது குடும்பத்திற்கு ஆதரவாக என் கிராமத்திற்கு அருகில் கைவிடப்பட்ட இந்தியாவின் பேய் நகரமான குல்தாராவின் நுழைவாயில் காவலராக வேலைக்குச் சேர்ந்தேன்.

இத்தனை வருடங்கள் ஆனாலும், பெரும்பாலும், மெரினாவைப் பற்றி நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் - 'அவள் திருமணம் செய்துகொண்டிருப்பாளா?', 'நான் அவளை மீண்டும் பார்க்கலாமா?' - இப்படித்தான் எனது எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதை விசாரிக்க அவளுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு எனக்கு ஒருபோதும் தைரியம் இல்லை. காலங்கள் செல்ல செல்ல நினைவுகள் மங்கின; குடும்பப் பொறுப்புகள் கூட எனது கவனம் அதில் சென்றது. 2 ஆண்டுகளுக்கு முன்பு, என் மனைவி காலமானார். என் மகன்கள் அனைவரும் திருமணமாகி தனியாக சென்றுவிட்டார்கள்.

இப்போது நான் ஒரு 82 முதியவன். வாழ்க்கை இனி என்னை ஆச்சரியப்படுத்த முடியாது என்று நான் நினைத்தபோது, அது நடந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு, என் காதலி மெரினா எனக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. 'எப்படி இருக்கிறாய் நண்பா' என அவள் எழுதிய வரிகள் எனக்கு வாழ்வில் அடுத்த ஊக்கத்தை கொடுத்தது. அவள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், அவள் விரைவில் இந்தியாவுக்கு வருவதாகவும் சொன்னாள்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு, அவள் என்னைக் கண்டுபிடித்திருக்கிறாள். அன்றிலிருந்து இன்று வரை அவள் தினமும் என்னை அழைத்து பேசுகிறாள். எங்களுக்குள் உள்ள பிடிப்பு இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. தற்போது, நான் மீண்டும் 21 வயதைப் போல உணர்கிறேன். எதிர்காலம் என்னவென்று எனக்குத் தெரியாது; ஆனால் எனது முதல் காதலி என் வாழ்க்கையில் திரும்பி வந்து தினமும் என்னுடன் பேசுவது என்பது என்னால் விளக்க முடியாத ஒரு உணர்வு" என்று விவரிக்க முடியாத உணர்வை வெளிப்படுத்துகிறார் முதியவர்.

Humans of Bombay-ல் அவரின் காதல் செய்திகள் வெளியானதும், ஆயிரக்கணக்கான வாசகர்களை அவரின் காதல் கதை கவர்ந்தது. "ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறேன். தயவுசெய்து இந்த கதையைப் பின்தொடரவும்! உங்கள் நம்பமுடியாத பணக்கார கலாசாரத்தையும் நீங்கள் விரும்பும் வீட்டையும் விட்டு வெளியேற விரும்பவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஐயா. இந்த பொற்காலங்களில் உங்களுக்கும் மெரினாவிற்கும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்" என்று ஒரு வாசகர் கூறியிருக்கிறார்.

"என்ன ஒரு அழகான கதை! அடுத்து என்ன நடக்கிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன்... மெரினா இந்தியாவுக்கு வரும்போது? தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் - இந்த காதல் கதையைப் பற்றி நாம் அனைவரும் கேட்க வேண்டும்!" என்று மற்றொரு வாசகர் கூறியிருக்கிறார்.