மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், ஒரே தோல்வியால் அடித்தளமே சிதையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஃபால்டா மறுதேர்தலில் 4வது இடத்துக்கு சரிந்தது மக்கள் ஆதரவு திடீர் சரிவை காட்ட, தலைவர்கள், தொண்டர்கள் பாஜகவுக்கு நகர்கின்றனர். இதன் பின்னணி அந்த மாநிலத்தின் நீண்டகால அரசியல் பாரம்பரியத்தில்தான் உள்ளது.
இந்தியாவில் பொதுவாகவே பல மாநிலங்களில் இரண்டு பலம்வாய்ந்த கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரும் நிலையே இருந்து வருகிறது. பீகார், குஜராத், ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் நீண்டகாலமாக ஒரு கட்சியில் தொடர்ந்து வந்தாலும், எதிர்க்கட்சியும் அங்கு தொடர்ந்து முக்கிய இடத்தை பெற்று வரும்.
ஆனால் இந்த பாரம்பரியத்தில் இருந்து முற்றிலும் மாறுபாடு கொண்ட மாநிலமாக மேற்கு வங்கம் நீண்ட காலமாகவே விளங்கி வருகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக தோல்வியை தழுவியுள்ளது. ஆனால் இந்த தோல்வி வெறும் தேர்தல் தோல்வியாக இல்லாமல் அந்த கட்சியின் அடித்தளத்தையே காலி செய்யும் அளவு உருமாறியுள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் 80 எம்.எல்.ஏக்களோடு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக திரிணாமூல் உருவாகியிருந்தாலும், அங்கு நடந்த ஃபால்டா சட்டப்பேரவை தொகுதி மறுதேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இது அந்த கட்சி ஒரே தேர்தலில் மக்களின் ஆதரவை இழந்ததையே வெளிப்படுத்துகிறது.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஆளும் கட்சியான பாஜகவில் சேர தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். பிற மாநிலங்களில் ஒரு கட்சி பல தோல்விகளை கண்டால் மட்டுமே தனது அடித்தள ஆதரவை இழக்கும். ஆனால் மேற்கு வங்கத்தில் மட்டும் ஒருமுறை ஆட்சியை இழந்தாலே அந்த கட்சியின் அடித்தளம் காலியாகி விடுவது வழக்கமாக உள்ளது. இதற்கான காரணம் குறித்து அறிய அந்த மாநிலத்தின் தேர்தல் வரலாற்றை பார்க்கவேண்டும்.
சுதந்திரம் பெற்றதில் இருந்து அங்கு காங்கிரஸ் ஆட்சிபுரிந்து வந்த நிலையில், ஜோதிபாசு தலைமையில் 1977-ம் ஆண்டு அங்கு சிபிஎம் ஆட்சியை கைப்பற்றியது. அதுவரை நில உடமையாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரம் அப்படியே கிராமப்புற சாதாரண மக்களுக்கு மாறியது. கிராமப்புற மக்களின் பெரும் ஆதரவை பெற்றதால் சுமார் 34 ஆண்டுகாலம் அங்கு இடதுசாரிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சியில் இருந்தனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியின் அடித்தளமே சிதைந்த நிலையில், அங்கு எதிர்க்கட்சியே இல்லாத ஒரு சூழல் உருவானது. மேலும் அங்கு முழுக்க முழுக்க அடிமட்ட கட்டமைப்பு ஆளும் கட்சியின் ஆதிக்கத்தில் இருக்கும் வகையில் உருமாறியது. இதனால் ஆட்சி மாறியதும் அடிமட்ட நிர்வாகிகள் அப்படையே ஆளும் கட்சியை சார்ந்தோ, அல்லது ஆட்சி மாறினால் அந்த கட்டமைப்பு அப்படியே ஆளும் கட்சிக்கு மாறும் ஒரு விநோதமான அரசியல் மேற்கு வங்கத்தில் உருவானது.
இதன் காரணமாகவே மேற்கு வங்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு 34 ஆண்டுகால கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்தபோது, இடதுசாரிகள் வசமிருந்த அடிமட்ட கட்டமைப்பு அப்படியே திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாறியது. அடுத்த வந்த தேர்தல்களில் இடதுசாரிகள் 4 சதவீத வாக்குகளையே பெரும் அளவு மக்கள் செல்வாக்கை குறுகிய காலத்திலேயே இழந்தனர்.
அந்த வகையில் தற்போது மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை இழந்த நிலையில், அந்த கட்சியின் அடித்தள கட்டமைப்பும் அப்படியே ஆட்சியில் உள்ள பாஜகவை நோக்கி நகர்ந்து வருகிறது. அதே நேரம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இடத்தை இடதுசாரிகள் கைப்பற்றும் சூழலும் அங்கு உருவாகியுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியபோது இடதுசாரிகள் வசமிருந்த அலுவலகங்களும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியால் கைப்பற்றப்பட்டது. இடதுசாரிகள் தொண்டர்கள் செயல்படவே முடியாத வகையில் முடக்கப்பட்டனர். இந்த சூழலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் வீழ்ந்துள்ள சூழலை பயன்படுத்தி இடதுசாரிகள் தங்கள் பாரம்பரிய வாக்குகளை மீட்டு வருவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் வரும் காலங்களில் திரிணாமூல் காங்கிரஸ் இடத்தை இடதுசாரிகள் பிடித்து பாஜக மற்றும் இடதுசாரிகளுக்கு இடையேயான மோதலே மேற்கு வங்க அரசியலில் பிரதானமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.