பிரான்ஸ் நாட்டிலுள்ள டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த 36 விமானங்களும் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
முதற்கட்டமாக 2020 மே இறுதியில் 5 ரஃபேல் போர் விமானங்கள் வரும் என முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இரண்டு மாதங்கள் தாமதமாக இந்தியாவுக்கு வருகின்றன. இந்த விமானங்கள் இன்று பிற்பகல் ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்திற்கு வந்தடையும். மீதமுள்ள விமானங்கள் ஆகஸ்ட் மாதம் வர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் வந்துவிட்டதை வீடியோ மூலம் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. பறவைகள் இந்திய வான் எல்லைக்குள் வந்துவிட்டதாகவும் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். இரண்டு பாதுகாப்பு விமானங்களுடன் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்குள் வருகின்றன.