மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை முழுமையாக அமல்படுத்திய நிலையில், வாகனங்கள் பழுதாகும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து E20 ஜனதா கட்சி உருவாகியுள்ளது. 100% தூய்மையான பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும், நுகர்வோருக்கு எரிபொருள் தேர்வு உரிமை வழங்க வேண்டும் என கோருகிறது. நிதின் கட்கரி ராஜினாமா கோரியும், ஆகஸ்ட் 4 அன்று டெல்லி பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு சோதனை முயற்சியாக பெட்ரோலில் 1.5 சதவீதம் எத்தனாலை கலந்தது. அதன் பின்னர் இந்த விகிதம் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டு பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வந்த நிலையில், அந்த இலக்கும் எட்டப்பட்டுள்ளது. தற்போது E20 திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் எரிபொருளில் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இதனிடையே பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகுவதாகவும் தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து E20 ஜனதா கட்சி என்ற அமைப்பு உருவாகியுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கரப்பான் ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்துள்ளது. இதனால் அதனை முன் மாதிரியாக வைத்து எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் E20 ஜனதா கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
எத்தனால் கலக்கப்படாத 100% தூய்மையான பெட்ரோலையும் பெட்ரோல் பங்குகளில் விற்பனை செய்ய வேண்டும் என்பதும், நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளைத் தேர்வு செய்யும் உரிமையை வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் (X) தளத்தில் உருவெடுத்துள்ள இக்கட்சியின் கணக்கு குறுகிய காலத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களை பெற்றுள்ளது. இக்கட்சி மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தனது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி டாக்ஸி மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.