இந்தியா

பிறந்தநாள் ஏலத்தில் பங்குபெறும் பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள்.. முழுவிவரம்!

Abinaya

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவருக்கு வந்த பரிசுகள் ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்பட உள்ளது. ஏற்கனவே 3 முறை இதுபோன்று ஆன்லைன் வாயிலாக ஏலம் நடந்துள்ள நிலையில், 4வது முறையாக pmmementos.gov.in எனும் இணையதளத்தில் வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி ஏலம் துவங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை ஏலம் நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் புகழ்பெற்ற நபர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டவர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களால் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் விலை உயர்ந்த நினைவுச் சின்னங்கள் இடம் பெறும். அந்தவகையில், இந்த முறை விளையாட்டு மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் மற்றும் இந்தியாவின் மிகவும் பிரபலமான சில விளையாட்டு வீரர்களால் ஆட்டோகிராப் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஜெர்சிகள் மற்றும் பேட்மிண்டன் ராக்கெட்டுகள் மற்றும் பல விலையுயர்ந்த பரிசுகளும் ஏலத்தில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் பரிசுகளின் சிறப்புக்கண்காட்சி புது தில்லியிலுள்ள தேசிய நவீன கலைக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பரிசுகளாகப் பெறப்பட்ட 1,000க்கும் அதிகமான பொருள்களின் தொகுப்பைக் காட்சிப்படுத்துவது ஒரு மரியாதை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அனைத்து பரிசுப்பொருட்களும் செப்டம்பர் 17ம் தேதி முதல் ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது.

மேலும் 1200-க்கும் அதிகமான பரிசுப்பொருள்களின் ஆரம்ப விலையானது ரூபாய்.100 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும். 2019 முதல் பிரதமர் அலுவலகத்தால் ஆன்லைன் ஏலம் துவங்கப்பட்டது. கடந்த காலத்தைப் போலவே ஏலத்தின் வாயிலாகக் கிடைக்கும் பணத்தை, கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணிக்குப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க பரிசுப்பொருள்களை யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம்.