திருப்பதி கோயில் தேவஸ்தானம் ஆயிரத்து 300 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான விஷ்ணு நிவாசம், ஸ்ரீனிவாசம் மற்றும் மாதவம் ஆகிய விடுதிகளில் ஆயிரத்து 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகத் தூய்மைப் பணிகள் உள்ளிட்டவற்றைச் செய்து வந்தனர். இதனிடையே, தேவஸ்தானத்திற்குத் தொழிலாளர்களை வழங்கும் மனிதவள நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், புதிய டெண்டர்கள் குறித்து அந்நிறுவனம் இதுவரை அணுகவில்லை எனத் தேவஸ்தான செய்தித் தொடர்பாளர் ரவி தெரிவித்துள்ளார். எனவே ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காததால் ஆயிரத்து 300 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் தேவஸ்தானம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.