நாட்டிலேயே நிர்வாகத்திறனில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
18 பெரிய மாநிலங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மத்திய அரசு அது தொடர்பாக பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி மத்திய நிர்வாக சீர்த்திருந்தத்துறை அமைச்சகம் இந்த பட்டியலை வெளியிட்டது.
அதில், நாட்டிலேயே நிர்வாகத்திறனில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரா 2ஆவது இடத்திலும், கர்நாடகா 3ஆவது இடத்திலும், சட்டீஸ்கர் 4வது இடத்திலும், ஆந்திரப் பிரதேசம் 5வது இடத்திலும், குஜராத் 6வது இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளிலும் தமிழகம் முதலிடம் வகிப்பதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறையில் கேரளா முதலிடத்தையும் தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழகம் வேளாண்மை துறையில் 9 வது இடத்திலும், வணிகத்தில் 14 வது இடத்திலும், மனித வளமேம்பாட்டில் 5 வது இடத்திலும் உள்ளது. 18 பெரிய மாநிலங்களின் பட்டியலில் பொருளாதார நிர்வாகத்தில் தமிழகத்திற்கு 5 வது இடம் கிடைத்துள்ளது.