நிதிஷ் குமார், ஔரங்கசீப் pt web
இந்தியா

ஔரங்கசீப்பை முன்வைத்து நடக்கும் விவாதம்.. பீகாரில் பாஜக மற்றும் ஜேடியு கூட்டணியில் விரிசலா?

பீகார் மாநிலத்தில் ஔரங்கசீப்பை முன்வைத்து நடக்கும் விவாதத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கேஷ்வர்

பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பை முன்வைத்து எழுந்துள்ள விவாதம் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை முழுமையாக அறிந்துகொள்ள மகாராஷ்டிராவில் நடப்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பாலிவுட் இயக்குநர் லக்ஷ்மன் உத்தேகர் இயக்கத்தில், விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் சவ்வா (Chhaava). இத்திரைப்படம் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜ் மற்றும் ஔரங்கசீப் படைகளுக்கு இடையில் நடந்த போர் மற்றும் சூழ்ச்சிகளை மையமாக வைத்து உருவாகியிருந்தது. கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியான திரைப்படத்தினை ஒட்டிய விவாதத்தில், சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ அபு ஆஸ்மி, “சாவாவில் தவறான வரலாறு காட்டப்படுகிறது. ஔரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார். அவர் கொடூரமான நிர்வாகி என நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார். இது மகாராஷ்டிர அரசியலில் விவாதத்தினை ஏற்படுத்தியது. தனது வார்த்தைகள் திரிக்கப்பட்டுள்ளதாக அபு அஸ்மி தெரிவித்தும், அவரது கருத்துக்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்று திரண்டு போராடினர். அதுமட்டுமின்றி, மார்ச் 26 ஆம் தேதி வரை அஸ்மி மகாராஷ்டிர சட்டமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான காலித் அன்வர், “பலரும் கூறுவதுபோல் ஔரங்கசீப் கொடூரமானவர் அல்ல. ஔரங்கசீப் பற்றிய விவாதங்கள் நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற விவாதங்கள் சமூகத்தைப் பிளவுபடுத்தவே செய்யும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து பல பாஜக தலைவர்கள் காலித் அன்வரின் கருத்தை விமர்சித்து வருகின்றனர். ஔரங்கசீப் தனது தந்தையை பிணைக்கைதியாக வைத்திருந்த கொடூரமான ஆட்சியாளர்.. அவரது சகோதரர்களின் தலைகளைத் துண்டித்தவர் என்றும் அத்தகைய நபர்களைப் புகழ்வது தேசத்துரோகம் என்றும் தெரிவித்தனர்.

அம்மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் பாஜகவைச் சேர்ந்த நீரஜ் குமார் சிங் பப்லு, ஔரங்கசீப் இந்நாட்டைக் கொள்ளையடித்தார் எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஔரங்கசீப் இந்நாட்டைக் கொள்ளையடித்தார். அவருக்கு ஆதரவாக பீகாரில் விவாதம் நடந்தால், அது மிகவும் வருத்தமாகவும், கவலையளிக்கும் ஒன்றாகவும் இருக்கும். ஔரங்கசீப்பிற்கு ஆதரவாகப் பேசுபவர்கள் வரலாற்றைப் படிக்க வேண்டும். வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டைக் கொள்ளையடித்தவர்களை நாம் மகிமைப்படுத்தினார் அது மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கும். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஐக்கிய ஜனதா தளம் காலித் அன்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், ஜனநாயகத்தில் அனைவருக்கும் தனது கருத்தினைப் பேச உரிமையுண்டு என்றும் அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மற்றொருபுறம் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் காலித் அன்வரின் கருத்தினை ஆதரித்துள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றினைக் கையாளக்கூடாது என்றும் முழுமையான வரலாற்றினைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பாஜக அரசியல் ஆதாயத்திற்காக ஔரங்கசீப், ஷாஜஹான் மற்றும் அக்பரின் பெயரைப் பயன்படுத்துவதாக ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திக் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மாதங்களுக்குள் பீகாரில் தேர்தல் தொடர்பான பரப்புரைகள் தொடங்கிவிடும் என்பதால் ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது.