இந்தியா

ஃபோனி புயல்: உயிரிழப்பு 38 ஆக உயர்வு

webteam

ஒடிசா மாநிலத்தில் ஃபோனி புயலின் கோரத்தாண்டவத்தால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

ஃபோனி புயல் ருத்ரதாண்டவம் ஆடி ஒடிசாவை புரட்டி போட்டுள்ளது. புயலின் கோரதாண்டவத்தால் ஒடிசாவே உருமாறிக்கிடக்கிறது. மணிக்கு சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் அதி தீவிர புயலாக கரையை கடந்த ஃபோனி, பலத்த சேதங்களை விளைவித்து ஆறாத ரணச்சுவடுகளை பதித்துவிட்டு சென்றது. புயலால் பத்தாயிரம் கிராமங்களும், 52 நகரங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. புகழ்பெற்ற ஜெகந்நாத் கோயிலையும் இப்புயல் விட்டுவைக்கவில்லை. புயலின் ஆக்ரோஷத்தால், கோயிலின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது. ஃபோனி புயலால், ஒடிசாவில் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அம்மாநில அரசு போர்க்கால அடிப்படையில் மேலும் முடுக்கவிட்டு உள்ளது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப்பணியில் துரிதம் காட்டி வருகின்றன. ஃபோனி புயலால் ஒடிசாவில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் ஒடிசாவில் புயல் பாதித்த இடங்களை பிரதமர் நரேந்திர மோடி, இன்று நேரில் பார்வையிட உள்ளார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.