45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் நாடெங்கும் தொடங்குகிறது.
கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி 16ஆம் தேதி நாடெங்கும் முதன்முதலில் தொடங்கியது. முதலில் மருத்துவ துறையினருக்கு போடப்பட்ட நிலையில் பின்னர் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 60 வயதை கடந்தவர்களுக்கும் 45 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்படும் நிலையில் அது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடனும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை நடத்தினார். இதன் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்றும் எனினும் தடுப்பூசிகள் வீணாவதை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு என இரு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.