இந்தியா

`கொரோனா பரிசோதனையை உடனடியாக அதிகரிங்க’ - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

webteam

உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னமும் இருப்பதால் இந்தியாவிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பதால் இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பவும், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜப்பான், தென்கொரியா, பிரேசில், சீனா மற்றும் அமெரிக்காவில் கொரோனா திடீரென அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.  

இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில், “கொரோனா ரத்த மாதிரிகளை தினசரி மரபணு ஆய்வகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம்,  நாட்டில் புழக்கத்தில் இருக்கும் புதிய மாறுபாடுகளை சரியான நேரத்தில் கண்டறிந்து, தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்.

சோதனை கண்டறிதல் - சிகிச்சை - தடுப்பூசி மற்றும் கொரோனா பொருத்தமான நடத்தையை பின்பற்றுதல்  ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்துவதன் மூலம் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. வாரம்தோறும்  சுமார் 1,200 வழக்குகள் பதிவாகி வருகிறது என்பதை குறிப்பிட்ட ராஜேஷ் பூஷன், கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் சவால் தொடர்கிறது. உலகளவில் வாரந்தோறும் சுமார் 35 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன.

புதிய SARS-CoV-2 வகை பதிப்பை கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்த, சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளை முன்கூட்டியே கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சோதனை செய்தல் மற்றும் சரியான நேரத்தில் நிர்வகித்தல் ஆகியவற்றை உணர்த்துகிறது. எனவே, தற்போதுள்ள மாறுபாடுகளின் போக்குகளைக் கண்காணிப்பது மிகவும் முக்கியமானது" எனகூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சூழலில், அனைத்து மாநிலங்களும் முடிந்தவரை அனைத்து நேர்மறை வழக்குகளின் மாதிரிகள் தினசரி அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது