இந்தியா

விவசாயக் கடன் வட்டி ரத்து ? மத்திய அரசு பரிசீலனை

webteam

விவசாயக் கடனை குறித்த காலத்தில் கட்டினால் வட்டி முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகள் பிரச்னைகளை கையில் எடுத்து மத்திய அரசுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் விவசாயக் கடன் அனைத்தையும் பிரதமர் மோடி தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதை அவர் செய்யும் வரை தூங்க விடப் போவதில்லை என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார். மேலும் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு புத்தாண்டுப் பரிசாக விவசாயக் கடனுக்கான வட்டியை முற்றிலும் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயக் கடன் பெற்றவர்கள் குறித்த காலத்தில் அசலை திருப்பிச் செலுத்தினால், வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக டெல்லியில் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கடனை குறித்த காலத்தில் திரும்பச் செலுத்தும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வட்டியை ரத்து செய்வதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

எனினும் வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் இந்தச் சலுகையை புத்தாண்டுப் பரிசாக மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இப்போது விவசாயக் கடனை குறித்த காலத்தில் திரும்பச் செலுத்துவோரிடம் 4 சதவிகித வட்டி வசூலிக்கப்படுகிறது. இதை தள்ளுபடி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு பயன் கிடைப்பதுடன், கடனை குறித்த காலத்தில் திரும்பச் செலுத்தும் வழக்கத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும் என மத்திய அரசு கருதுகிறது. 

இதனைதொடர்ந்து உணவுப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்க் கடனுக்கான பிரீமியத்தை ரத்து செய்வது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விவசாயிகள் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருவதாகவும், அவர்களுக்கு பயனளிக்கும் அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.