இந்தியா

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? சிபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய கல்வி வாரியங்கள் பரிசீலனை

JustinDurai

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யலாமா, சுருக்க முறை தேர்வு நடத்தலாமா என்று சிபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய கல்வி வாரியங்கள் தீவிர பரிசீலனையில் உள்ளன.

கொரோனா பரவலால் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்னும் நடத்தப்படாமல் உள்ளன. அவற்றை நடத்துவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான மாநிலங்கள் முக்கிய பாடங்களுக்கு மட்டும் குறைந்த காலஅளவில் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தலாம் என்று தெரிவித்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கொரோனா ஆபத்து நீடிப்பதால் தேர்வை ரத்து செய்து, முந்தைய தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி ஆகிய கல்வி வாரியங்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளின் சராசரி மதிப்பெண் பட்டியலை வழங்குமாறு பள்ளிகளுக்கு ஐசிஎஸ்இ உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், மத்திய கல்வித் துறை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அதன் முடிவு ஜூன் ஒன்றாம் தேதி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.