இந்தியா

முடிவுக்கு வந்தது அமைச்சரவை இழுபறி! பதவி கிடைக்காமல் பல சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி?

webteam

மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்து ஒரு மாதம் கடந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளனர்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்ட நிலையில் அக்கட்சியின் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் இணைந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி ஆட்சியமைத்தார். அன்றைய தினம் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

அமைச்சரவை அமைக்கும் விவகாரத்தில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நீடித்த நிலையில் 40 நாட்களுக்குப் பிறகு 18 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளது. பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா ஆகிய இரு கட்சிகளிலும் தலா 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

பாஜக மாநில தலைவரான சந்திரகாந்த் பாட்டீலும் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். ஏக்நாத் ஷிண்டே அணியிலுள்ள சிவசேனா எம்எல்ஏக்கள் சிலர் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஈடுபட்டுள்ளார்.