இந்தியா

முத்தலாக் தடை ! அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல்

முத்தலாக் தடை ! அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல்

webteam

‘முத்தலாக்’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’வை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. மசோதா கொண்டு வந்தது முதலே சர்ச்சை வெடித்தது. இந்த மசோதாவின்படி, ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முடியும். 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும். விவாகரத்து என்பது சிவில் பிரிவில் வருகிறது. இதனால் அதனை கிரிமினல் குற்றத்தில் ஏன் கொண்டுவர வேண்டும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல், கணவர் மூன்று ஆண்டுகள் சிறைக்கு செல்லும் பட்சத்தில் மனைவி மற்றும் குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என்றும் பலர் விமர்சித்தனர். பாஜக தனது வகுப்புவாத கொள்கையை திணிக்க முயற்சிப்பதாக இஸ்லாமிய அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் சாடின. 

இந்த சட்ட மசோதா, மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், 3 முக்கிய திருத்தங்களுடன் முத்தலாக் தடை அவசர சட்டத்திற்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டோர் உடனடியாக ஜாமீன் பெற முடியாது என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட்டிடம் சென்று ஜாமீன் பெறலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெண்ணின் சார்பில் மற்றவர்கள் புகார் அளிக்க முடியாது என்றும் முத்தலாக் வழக்கின்போது, கணவனும், மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால், வழக்கை ரத்து செய்துவிட்டு மீண்டும் சேர்ந்து வாழவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள முத்தலாக் தடை அவசரச் சட்டம், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அமலுக்கு வரவுள்ளது. இந்தத் திருத்தங்கள் அடுத்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்தான் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட முடியும்.  


 
இந்நிலையில் மத்திய அமைச்சரவை முத்தலாக் மசோதாவில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு காங்கிரஸ்,திரிணாமுல் காங்கிரஸ்,சமாஜ்வாடி கட்சி,  பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்தப் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.