இந்தியா

ஆர்பிஐயின் அறிவிப்பு சாமானியர்களுக்கு எந்தவிதத்தில் பயன்படும்? நிபுணர்கள் சொல்வது என்ன ?

ஆர்பிஐயின் அறிவிப்பு சாமானியர்களுக்கு எந்தவிதத்தில் பயன்படும்? நிபுணர்கள் சொல்வது என்ன ?

webteam

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் சாமனிய மக்களுக்கு எந்தவிதத்தில் பயன்படும் என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ ரெப்போ விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது. மேலும் வீட்டுக்கடன் வட்டி மட்டுமின்றி தொழில்துறையினர் பெற்ற கடன்கள் மீதான வட்டியும் குறைய வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிவித்த இந்தச் சலுகைகள் சாமனிய மக்களுக்கு எந்தவிதத்தில் உதவும் என்பதை தெரிந்துகொள்ள பொருளாதார நிபுணர் நாகப்பனை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறும்போது “ ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்தச் சலுகைகள் எல்லா கடன்களுக்கும் பொருந்தும் என ஆளுநர் அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதில் கடன் அட்டைதாரர்களை பற்றி எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. 

இந்த பொதுவான அறிவிப்பையடுத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கான தனித்தனியான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வாய்ப்பிருக்கிறதா?

நிச்சயமாக. ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பை வெளியிட்டுருக்கிறது. அதனை செயல்படுத்துவதும் செயல்படுத்தாமல் இருப்பதும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் விருப்பம். ஆனால் தற்போது இருக்கும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் வங்கிகள் நிதி நிறுவனங்கள் இதனை செயல்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இ.எம்.ஐ விஷயத்தில், முதல் மற்றும் வட்டியையும் சேர்த்து மக்கள் செலுத்தி வருகிறார்கள். ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தை குறைத்துள்ளது. ஆகவே  இந்த 3 மாத இடைவெளி என்பது வட்டிக்கு மட்டும்தான் பொருந்துமா ?

இல்லை. இந்த சலுகை முதல் மற்றும் வட்டி இரண்டிற்குமே பொதுவானது. 

மேலும் இது குறித்து பிரபல பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பனிடம் கேட்டோம். 

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள், மக்களுக்கு எந்த விதத்தில் பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது?

ரிசர்வ் வங்கி, ரிப்போ ரேட்டை குறைக்கும்போது வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடன் தொகை வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என சொல்லி வருகிறது. ரிசர்வ் அறிவித்துள்ள அளவிற்கு குறைக்காவிடினும், குறைந்த பட்சம் 0.5 லிருந்து 0.6 வரையிலாவது வங்கிகள் வட்டி விகிததை குறைக்கும் என எதிர்பார்க்கலாம். இன்று அல்லது நாளை இது தொடர்பான அறிவிப்பை ஸ்டேட் பேங்க் வெளியிட வாய்ப்பிருக்கிறது.

இ.எம்.ஐ. முறையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு இந்தச் சலுகைகள் எந்த விதத்தில் பயன்படும் ?

ரிசர்வ் வங்கி இ.எம்.ஐ தொகையை கட்டுவதற்கு மூன்று மாதங்கள் கால இடைவெளி அளித்திருக்கிறது. இந்தக் கால இடைவெளியில் இதனை வாராக்கடனாக கருதக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தக் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படவில்லை. நிலைமையை பொருத்து வரும் காலத்தில் அவர்கள் கட்ட வேண்டிய தவணைத்தொகை, வட்டிவிகிதம் போன்றவை வேண்டுமானால் குறையலாம்.

பென்ஷன் வாங்கும் முதியவர்களுக்கு அதில் வரும் வட்டிதான் அன்றாட செலவுகளுக்கு பயன்படுகிறது. ஆகவே அவர்களுக்கு இது எந்த வகையில் பயன்படும்?

வங்கிகளை பொருத்தவரை வட்டி என்பது கொடுத்தாலும் சரி வாங்கினாலும் சரி அதே வட்டிதான். ஆகவே இது இரண்டு பக்கமும் சம அளவில் நகரும். ஆனால் ஏற்கெனவே குறிப்பிட்ட வட்டிவிகிதத்தில் நாம் பணத்தை செலுத்தி இருந்தால் அதற்கான வட்டிவிகிதம் குறையாது. புதிதாக பணம் செலுத்தும் போது இந்த வட்டிவிகிதம் குறைக்கப்படும். 

தனியார் நிதி நிறுவனங்களுக்கும் இந்தச் சலுகைகள் பொருந்துமா இல்லை அவர்களுக்கு தனி அறிவிப்பு வெளியாகுமா?

ரிசர்வ் ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பணம் சம்பந்தமான சலுகை விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நுகர் பொருட்களுக்கான சலுகைகள் அடுத்த அறிவிப்பில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதில் இந்த முறைகளில் வங்கி செயல்படுமானால் வங்கிகளில் உள்ள பணமானது சுழற்சி ஆகாது. ஆகவே தான் ரிசர்வ் வங்கி ரிப்போ ரேட் குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி இருக்கிறது,