இந்தியா

புலந்த்ஷர் கலவரத்தில் காவலரின் விரல்களை வெட்டியவர் கைது

webteam

உத்தரப்பிரதேசத்தில் பசுக்களை காக்க வலிறுத்திய போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் காவல் ஆய்வாளரை கோடாரியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் பசுக்கள் சடலங்கள் கிடப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து, கடந்த 3ம் தேதி கிராமத்திற்குள் ஒன்றுதிரட்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு சாலைகளை மறித்தனர். இந்தப் போராட்டம் குறித்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் உள்ளூர் போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்தவும், சாலை போக்குவரத்தை சீர்செய்யவும் முயற்சி செய்தனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திடீரென அப்பகுதியில் உள்ள சிலர், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, காவல் நிலையத்திற்கும் சென்று அவர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்ததை அடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. 

இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதலில் அவர் பேராட்டக்காரர்களின் கல்லெறித் தாக்குதலுக்கு உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் மீது போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிரஷாந்த் என்பவர் கடந்த 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இரண்டாவது குற்றாவாளியான கலுவா என்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் உயிரிழப்பதற்கு முன் அவரது இரு விரல்களை கலுவா வெட்டிய வீடியோ ஆதாரத்தின் ‌அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.