Opposition Parties Meet Twitter
இந்தியா

'India' - மம்தா முன்மொழிய, ஸ்டாலின் ஆமோதிக்க, ராகுல் இறுதி செய்த கூட்டணியின் பெயர்!

பாஜகவிற்கு எதிரான அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், அக்கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இரா.செந்தில் கரிகாலன்

கர்நாடக மாநிலத் தலைநகரமான பெங்களூருவில் நடைபெற்ற, 26 கட்சித் தலைவர்கள் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், அந்தக் கூட்டணிக்கு `India’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. `Indian National Developmental Inclusive Alliance ’ என்பதன் சுருக்கமே `India’. தமிழில், இந்திய தேசிய வளர்ச்சிக் கூட்டணி என எடுத்துக் கொள்ளலாம். இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், ஒவ்வொரு கட்சியையும் பெயர்களையும் பரிந்துரைகளையும் அளித்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த விவாதத்தில், இறுதியாக இந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பின்னணியை இங்கே பார்ப்போம்..,

பாஜகவைத் தோற்கடிக்க எடுக்கப்பட்ட முன்னெடுப்பு!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்னெடுத்தார். அந்தக் கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில், ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார், சுப்ரியா சுலே, சிவசேனா தலைவர்கள் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், ஆதித்யா தாக்கரே, சி.பி.ஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ (எம்.எல் - லிபரேஷன்) பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி உட்பட 17 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Opposition Parties Meet

இந்தநிலையில், இந்தக் கட்சிகளின் இரண்டாவது கூட்டம், முதலில் இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், ஜூலை, 13-14 தேதிகளில் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடத்தத் திட்டமிட்டு, பின்னர் நேற்று மற்றும் இன்று கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், இந்தக் கூட்டணிக்கான பெயரும் `India' என இறுதி செய்யப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள்!

கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் பெயர் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், `We for india’ என்ற பெயரையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் SAVE INDIA ALLIANCE or SECULAR INDIA ALLIANCE என்ற பெயரையும் பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் `Indian main alliance or Indian main front’ என்ற பெயரையும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ’Indians peoples alliance’ என்ற பெயரையும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா `Indian people front’ என்கிற பெயரையும் பரிந்துரைத்துள்ளனர். தவிர, பெயர் குறித்த விவாதத்தில், கூட்டணி என்கிற வார்த்தைக்குப் பதிலாக, முன்னணி என்கிற வார்த்தை வர கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர். தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர், மமதா பானர்ஜிதான் `India' என்ற பெயரை முன்மொழிந்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அந்தப் பெயரே சரியாக இருக்கும் என கருத்துத் தெரிவித்துள்ளார்.

Opposition Parties Meet

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் `India' என்கிற பெயரையே ஆதரித்துப் பேசியுள்ளனர். இறுதியாக, ராகுல் காந்தியும் `India' என்கிற பெயரை இறுதி செய்ய, அந்தப் பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. முதலில், India என்பதற்கு `Indian National Democratic Inclusive Alliance' என்றே முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின், ஆங்கிலப் பதமும், `National Democratic Alliance’ என்று இருப்பதால், மாற்றம் செய்யவேண்டும் என நிதிஷ்குமார் கோரிக்கை விடுக்க, பின்னரே `Developmental’ என மாற்றப்பட்டுள்ளது.

Opposition Parties Meet

மோடிக்கு எதிராக யார் என்ற கேள்வி எழுகிறது. மோடிக்கு எதிராக இந்தியாவே உள்ளது என்பதற்கு சான்றாக இந்தியா என பெயர் என எதிர்க்கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம், மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

- இரா.செந்தில் கரிகாலன்