இந்தியா

சபரிமலை காடுகளில் ஐயப்ப பக்தர்களை காத்த வன தேவதைகளுக்கு நன்றி சொல்லும் `ஸ்ரீகுருதி’ பூஜை!

webteam

வனதேவதைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சபரிமலை அருகே மாளிகை புரத்து அம்மன் சன்னதியில் நேற்று வியாழக்கிழமை (19.01.23) இரவு 'ஸ்ரீகுருதி' பூஜை நடைபெற்றது.

சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை முடிந்து, நேற்றுடன் (19.01.23) நடை அடைக்கப்பட்டது. சபரிமலையில் நடை அடைக்கப்பட்டதை அடுத்து மாளிகைபுரம் சன்னதியில் ஸ்ரீகுருதி பூஜை நடைபெற்றது.

சபரிமலை பூஜைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் இந்த ஸ்ரீகுருதி பூஜை, காடுகளில் இருந்து சபரிமலை வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அசம்பாவிதங்களில் இருந்து காப்பாற்றிய வன தேவதைகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஐதீகத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

அதன்படி, குருதி பூஜைக்காக சபரிமலை அருகே உள்ள மாளிகை புரத்தில் தென்னங்கீற்றால் ஆன குடில் அமைத்து ஆதிவாசியின மக்களின் குரு தலைமையில் இந்த பூஜை நடத்தப்பட்டது. பலி பீடத்தின் மேல் பூசணிக்காய் வைத்து அதை வாளால் பிளந்து அதன் அருகில் உள்ள ரத்தம் போன்ற நீர் கலவையை தெளித்து இந்த குருதி பூஜை நடத்தப்பட்டது.

பூஜையில் பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி, சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி, மாளிகைபுரம் மேல்சாந்தி, தந்திரிகள், நம்பூதிரிகள், ஐயப்ப பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.