இந்தியா

நேற்று 9 நிமிடங்களில் எவ்வளவு மெகாவாட் மின் பயன்பாடு குறைவு தெரியுமா?

webteam

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைத்ததன் மூலம் 31 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சார பயன்பாடு குறைந்திருந்ததாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் பெரும்பாலானோர் மின் விளக்குகளை அணைத்து, மீண்டும் ஆன் செய்ததன் மூலம், தமிழகத்தில் மின்சார பயன்பாட்டில் எந்தவித பிரச்னையும் இல்லை எனவும், அந்த குறிப்பிட்ட 9 நிமிடங்களில் மாநிலத்தில் 2 ஆயிரத்து 200 மெகாவாட்‌ மின்சார பயன்பாடு குறைந்திருந்ததாகவும் அவர் கூறினார். சென்னையில் மட்டும் 350 மெகாவாட் அளவுக்கு மின்சார பயன்பாடு குறைந்திருந்ததாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

முன்னதாக, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட், செல்போன் பிளாஷ் உள்ளிட்டவற்றால் ஒளியேற்றும்படி பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் மக்களுடன் இணைந்து பல்வேறு தலைவர்களும் தீபங்களை ஏற்றினர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாளிகையில் ஒற்றுமையின் ஒளியை ஏற்றினார். டெல்லியில் உள்ள தமது இல்லம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஆள் உயர குத்துவிளக்கை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தீப ஒளி ஏற்றினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியும் தமது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தினார்.

இதேபோல், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தமது இல்லத்தில் அகல் விளக்குகளை ஒளிரச் செய்தார். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், ஜெயக்குமார், க. பாண்டியராஜன், எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் தங்களது வீடுகளில் தீப ஒளியேற்றினர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோரும் தங்கள் வீடுகளில் ஒளியேற்றி தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதேபோல் பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தரும் தமது வீட்டில் ஒளியேற்றினர்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்ளிட்டோரும் தங்களது இல்லங்களில் ஒளியேற்றி வைத்தனர்.