பாந்த்ரா Pt web
இந்தியா

மசூதி, 400க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு.. மூதாட்டியை தாக்கிய காவல்துறை.. மும்பையில் நடப்பது என்ன?

பாந்த்ரா கிழக்கு பகுதியில் உள்ள ரயில்வே நிலத்தில் இருந்த மசூதி மற்றும் வீடுகளை இடிக்கும் பணியின்போது ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர், முதியவர்கள் மற்றும் பெண்கள் மீது தடியடி நடத்திய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையின் மேற்குக் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய மற்றும் பிரபலமான புறநகர்ப் பகுதி பாந்த்ரா. இதன் கிழக்குப் பகுதியில் காரீப் நகர் எனும் குடிசைப் பகுதி, பாந்த்ரா ரயில் நிலைய நிலத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒருங்கிணைந்த ரயில்வே நிலைய வளாகம் கட்டப்படவுள்ள நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளில் மேற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. மேலும், புதிய 5 மற்றும் 6-வது ரயில் பாதைகள் (Railway Lines) அமைக்க இடவசதி கிடைக்கும் எனவும் இதன் மூலம் கூடுதலாக 12 புறநகர் மற்றும் வெளிமாநில ரயில்களை இயக்க வழிவகை ஏற்படும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

பாந்த்ரா

இச்சூழலில் தான், காரீப் நகர் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு 2017 முதல் நீதிமன்றத்தில் இருந்து வந்த நிலையில் தான், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி மும்பை காரீப் நகர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. தொடர்ந்து, அனைத்து 359 குடிசைகளையும் புதிதாகக் கணக்கெடுக்கக் கோரி கரீப் நகர் ரஹவஷி சங்கம் தாக்கல் செய்த மறு மனுவை, பம்பாய் உயர் நீதிமன்றம் மே 15 அன்று நிராகரித்தது. இதனையடுத்து, கடந்த மே 19 செவ்வாய்கிழமை உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் அதிகாரிகள் காரீப் நகரில் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாள் இடிப்பு பணியின் போது, 400 நகரக் காவல் துறையினர், 200 ரயில்வே பாதுகாப்புப் படையினர் உட்பட 1,000 பேர், போக்லைன் மற்றும் புல்டோசர்களின் உதவியுடன் இடிப்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல் நாள் வீடுகள் மட்டுமே இடிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து, இரண்டாம் நாளான புதன்கிழமை கரீப் நகர் பகுதியில் இருந்த 'பைசானே முஸ்தபா கரீப் நவாஸ்' மற்றும் 'மசூதி-இ-இனாம்' ஆகிய இரு மசூதி கட்டடங்களை இடிக்கத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வழிபாட்டுத் தலங்களை இடிப்பதற்கும், வாழ்விடங்களை அப்புறப்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உட்பட பொதுமக்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாந்த்ரா இடிப்பு பணிகள்

இப்போராட்டம் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறிய நிலையில், போலீசார் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இதையடுத்து இந்தக் கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தசூழலில் தான், இந்தத் தடியடியின் போது, காவல்துறையினர் பெண்கள் மற்றும் முதியவர்களின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதில், குறிப்பாக வயதான மூதாட்டி ஒருவரை காவல் அதிகாரி ஒருவர் லத்தியைக் கொண்டு தலையில் அடிப்பது போன்ற காணொளி இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. தொடர்ந்து, அசாம்பாவிதங்களை தடுக்க காரீப் நகரில் ரயில்வே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அப்புறப்படுத்தும் பணிகள் இன்று மற்றும் நாளையுடன் நிறைவடையவிருக்கிறது. எவ்வித முன்னறிவிப்போ அல்லது கால அவகாசமோ வழங்காமல் அதிகாரிகள் இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த மீட்பு நடவடிக்கை அவசியமானதெனவும், அதேசமயம், இப்பகுதி மக்களுக்கு உரிய மறுவாழ்வு நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.