இந்தியா

பான் கார்டுடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

பான் கார்டுடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

webteam

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்கும் வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே ஆதார் எண் வைத்திருப்பவர்கள் பான் கார்டுடன் அதை இணைப்பதில் எந்தவித பிரச்னையும் இல்லை. அதேநேரம், ஆதார் கார்டுகள் இல்லாதவர்கள் மற்றும் புதிதாக ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்திருப்பவர்களுக்கு இந்த விதிமுறையை கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்கும் வரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்ததுடன், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. மேலும், ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் செல்லாததாகிவிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினாய் விஸ்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்களில், ஆதார் எண் பெறுவது மக்களின் தனிப்பட்ட விருப்பம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, அரசின் உத்தரவு இருப்பதாக வாதிட்டனர். ஆனால், போலி நிரந்தர எண்களை களைவதற்காகவே ஆதார் கட்டாயமாக்கப்பட்டதாக மத்திய அரசு வாதிட்டது. இந்த போலி நிரந்தர எண்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு பணம் அளிப்பதற்கும், கருப்புப் பணப் புழக்கத்தை ஊக்குவிக்கவும் பயன்படுவதாகவும் அரசு வாதிட்டிருந்தது. ஆதார் அட்டையை கட்டாயமாக்கியதன் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமித்திருப்பதாக அரசு சுட்டிக்காட்டியிருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.