இந்தியா

“போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பெண்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு

“போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பெண்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். ஐ.ஜி ஸ்ரீஜித் தலைமையில் இரண்டு பெண்களுக்கும் பலத்த பாதுகாப்பு தரப்பட்டது. இதுவரை எந்த பெண்களும் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், 2 பெண்கள் பயணம் செய்தனர். தலைகவசம் உள்ளிட்ட காவல்துறையின் பாதுகாப்பு உபகரணங்கள் பெண்களுக்கும் வழங்கப்பட்டன. 

பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து போலீஸார் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீஸார் அந்தப் பெண்களை பாதுகாப்பாக ஒரு இடத்தில் தங்க வைத்தனர். ஆனால், ஒரு பக்கம் பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இது குறித்து மேலும் அறிக்கை வெளியிட்ட கேரள மாநிலத்தின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்தரன், “அரசின் நோக்கம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே. சமூக செயற்பாட்டாளர்களுக்கு அல்ல. எனவே, போராட்டக்காரர்களுக்கும், செயற்பாட்டாளர்களும் ஒரு வேண்டுகோள். சபரிமலை போராடுவதற்கான இடம் அல்ல. சபரிமலைக்கு வந்து உங்கள் போராட்ட எண்ணங்களையும், வலிமையையும் வெளிப்படுத்த வேண்டாம். சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்களில் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர், மற்றொறுவர் பத்திரிகையாளர். சபரிமலை விஷயம் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஆந்திரம் மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராக கவிதா பணியாற்றி வருகிறார். செய்தியாளர் கவிதாவுடன் செல்வது பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருந்த நிலையில், கேரள அமைச்சரின் உத்தரவு வெளியாகியுள்ளது.