இந்தியா

ஒரே ஆண்டில் அண்ணன், தாய், தந்தையை இழந்த நடிகர் மகேஷ் பாபு: சோகத்தில் தெலுங்கு திரையுலகம்!

JustinDurai

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 80.

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா, உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேஷ் பாபுவின் தந்தையும் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணாவுக்கு, ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அவர் தற்போது உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வயது 80. சுமார் 350க்கும் மேற்பட்ட படங்களில், நடித்துள்ள இவர் தயாரிப்பாளர், இயக்குநர் என பல்வேறு தளங்களில் கடந்த 50 வருடங்களாகவே தெலுங்கு சினிமாவில் தடம் பதித்திருக்கிறார்.

இந்த 2022ஆம் ஆண்டு நடிகர் மகேஷ் பாபுவுக்கு இழப்புகளும் சோகமும் நிறைந்த ஆண்டாகவே அமைந்துவிட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 8ம் தேதி நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு (56) உடல்நலக்குறைவால் காலமானார். அதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 29ம் தேதி அவரது தயார் இந்திரா தேவி (70) காலமானார். இதனையடுத்து தற்போது மகேஷ் பாபுவின் தந்தையும் இன்று காலமாகி இருக்கிறார். ஒரே ஆண்டில் அண்ணன், தாய், தந்தையை இழந்த நடிகர் மகேஷ் பாபுவுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: பிரபல டிவி நடிகை சாலை விபத்தில் உயிரிழப்பு - ரசிகர்கள் சோகம்