இயற்கையை நாம் காப்பாற்றினால் இயற்கை நம்மை காப்பாற்றும் என்றும் பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம் . ஆனால், இந்த வாசகத்தை ஒரு அட்டையில் வெட்டி அதனை தன்னோடு எடுத்துசெல்வதை வழக்கமாக கொண்டிப்பவர்தான் தெலங்கானாவை சேர்ந்த விவசாயி ஒருவர்.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ரெட்டிபல்லி கிராமத்தை சேர்ந்தவர்தான் விவசாயி ராமய்யா, வயது 87. பசுமைப்போராளி, சேட்டு (மரம்) ராமையா, வனஜீவு என்று பல பெயர்களால் பிரபலாமாக அழைக்கப்படும் இவர்தான் தான் காணும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர். இப்படி கடந்த பல தசாப்தங்களாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். எப்போதும் மரக்கன்றும் கையுமாக செல்லும் இவரை கேலி செய்தவர்கள் ஏராளம். ஆனால், மற்றொருபுறம் இவரது சேவைக்குதான் 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது மத்திய அரசு.
இந்தநிலையில், ராமய்யா 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே ஒரு மரக்கன்றை நட்டு விட்டு இரவு அதன் அருகே படுத்துறங்கியிருக்கிறார் .
அடுத்த நாள் காலையில் அவரை எழுப்பியபோது அவர் எழவில்லை. இந்நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை சோதித்துள்ளனர். ஆனால், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராமையாவின் மறைவுக்கு தெலங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். ’அவரது மறைவு சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு, ராமையா ஒரு தனிநபராக தோட்டக்கலையைத் தொடங்கி முழு சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார், பிஆர்எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவ் மற்றும் பல தலைவர்கள் ராமையாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.