YS Sharmila
YS Sharmila  Twitter
இந்தியா

போலீசாரை அறைந்த ஒய்.எஸ். ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் சிறை! தெலங்கனாவில் பரபரப்பு

Justindurai S

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுத் தாள் கசிந்தது பற்றி விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா சிறப்பு புலனாய்வு அலுவலகத்துக்கு சென்றபோது, பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்போது ஒரு பெண் போலீசை ஷர்மிளா தாக்கி உள்ளார். இது குறித்த புகாரில் போலீசார், அவரை இன்று (ஏப்.,24) கைது செய்துள்ளனர். அவருக்கு 14 நாட்கள் சிறைக் காவலில் இருந்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், "ஒய்.எஸ்.ஷர்மிளா எந்த முன் அனுமதியும் பெறாமல் எஸ்ஐடி அலுவலகத்திற்குச் சென்று அங்கு போராட்டம் நடத்த இருந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தததால் அவரது வீட்டிற்குச் சென்றோம். அதிகாரிகள் அவரிடம் விளக்கம் அளிக்கவும், அவரை அங்கு செல்ல விடாமல் தடுக்கவும் அங்கு சென்றனர். அவர் காவல்துறை அதிகாரிகளை தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளிடம் புகார் பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். பெண் காவலரை அவர் அறைந்ததாக வந்த செய்திகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஷர்மிளா தற்போது காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்'' என்றார்.

இதனிடையே இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஷர்மிளா, "தற்காப்புக்காக செயல்படுவது எனது பொறுப்பு. காவல்துறை என்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டனர்" என்று குற்றம் சாட்டினார். மேலும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சிபிஐ அல்லது பதவியில் இருக்கும் நீதிபதியால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.