இந்தியா

வருமானத்துக்கு மீறி சொத்து... கோடீஸ்வரராக வாழ்ந்த காவல் அதிகாரி!

webteam

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள காவல்துறை உதவி ஆணையர் ஒருவர் வருமானத்துக்கு மீறிய முறையில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். மேலும், அவருக்குச் சொந்தமாக 55 ஏக்கர் விவசாய நிலங்கள் இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரச்சகொண்டா காவல்சரகத்தின் மல்காஜ்கிரியில் காவல்துறை உதவி ஆணையராக இருப்பவர் ஒய். நரசிம்ம ரெட்டி. ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் அவருக்குத் தொடர்புள்ள 25 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டத்துக்குப் புறம்பான முறையில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதை கண்டறிந்தனர்.

ஆந்திரப் பிரதேசம், அனந்தபூரில் நரசிம்ம ரெட்டிக்கு 55 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஹைதராபாத் நகரின் பல இடங்களில் காலி மனைகள், 15 லட்சம் ரூபாய் பணம், வங்கி லாக்கர்கள், ரியல் எஸ்டேட் முதலீடுகள் மற்றும் பிற தொழில்கள் என அந்த காவல்துறை அதிகாரி கோடீஸ்வரராக வாழ்ந்திருக்கிறார்.

பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு காவல்துறை அதிகாரி நரசிம்ம ரெட்டி மீது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.