இந்தியா

‘லைஃபை தொலைச்சுராத குமாரு’ : ஓவர் லோடு பைக் ஓட்டிக்கு தெலங்கானா போலீஸ் சொன்ன அட்வைஸ்!

JananiGovindhan

போக்குவரத்து விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கச் சொல்லி தொடர்ந்து டிராஃபிக் போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டும், அதனை மீறுவோர் மீது அபராதங்கள் விதிக்கப்பட்டும் வந்த வண்ணம் இருந்து வருகிறது.

ஆனால், சில வாகன ஓட்டிகளின் விபரீதமான செயலால் சாலை விபத்துகள் நேரும் நிலை உருவாகிறது. இதனால் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறுவது அவ்வப்போது நிகழ்கிறது. இதுபோன்ற விபத்துகள் தாறுமாறாக வண்டி ஓட்டுவதால் மட்டுமல்லாமல் அதிகளவிலான பாரத்தை வண்டியில் ஏற்றுவதாலும் நிகழ்கிறது.

அந்த வகையில், தன் முன் மூட்டை மூட்டையாக பொருட்களை அடுக்கி வைத்து டூ வீலரில் செல்லும் ஒரு இளைஞர் வண்டியின் ஓரத்தில் உட்கார்ந்து அதனை ஓட்டிச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது.

அதனைக் கண்ட நெட்டிசன்களில் சிலர் கிண்டலாகவும், சிலர் கண்டனமும் தெரிவித்திருக்கிறார்கள். அதில் ‘32 GB data கொண்ட ஃபோனில் ஏற்கெனவே 31.9 GB Data இருக்கிறது’ என ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

அந்த வீடியோ வைரலான நிலையில் அது தற்போது தெலங்கானா மாநில போலீசார் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. இதனையடுத்து அதிக பாரத்தை ஏற்றி ஆபத்தான வகையில் டூ வீலர் ஓட்டிச் சென்ற அந்த நபரின் வீடியோவை பகிர்ந்த தெலங்கானா போலீஸ், “செல்போனில் அழிக்கப்பட்ட டேட்டாவை கூட மீண்டும் பெற்றுவிடலாம். ஆனால் வாழ்க்கை அப்படியல்ல. ஆகவே பிறர் மற்றும் உங்களின் வாழ்க்கையையும் ஆபத்தில் தள்ளிவிட வேண்டாம். போக்குவரத்து விதிகளை மதியுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அதிக பாரத்தை ஏற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என விதி இருக்கையில் வெட்டவெளியில் பகலில் இத்தனை பாரத்தை ஏற்றிச் சென்ற அந்த இளைஞர் மீது ஏன் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ALSO READ: