இந்தியா

சிஏஏக்கு எதிராக தெலங்கனா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

webteam

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேதிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக தெலங்கானா சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதே போல் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள இந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் பேரணிகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றை எதிர்த்து தெலங்கானா மாநில சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டுவந்தார். அதில், "இந்தியாவின் பெருவாரியான மக்களிடையே நிலவும் அச்சங்களைக் கருத்தில் கொண்டு, 2019 குடியுரிமை திருத்தச் சட்டத்தை திருத்தில் இடம்பெற்றுள்ள எந்தவொரு மதத்திற்கும் அல்லது எந்தவொரு வெளிநாட்டிற்கும் எதிராக அனைத்து ஷரத்துகளையும் நீக்குவதற்காக தெலங்கானாவின் சட்டமன்றம் இந்திய அரசை வலியுறுத்துகிறது” அத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் சிஏஏ மற்றும் என்பிஆரை எதிர்க்கும் மாநிலங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தை தெலங்கானா சட்டமன்றம் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி மற்றும் பீகார் ஆகிய சட்டமன்றங்கள் சிஏஏ மற்றும் என்பிஆர் சட்டங்களுக்கு எதிராக இதே போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

மேலும் "தெலங்கானா மக்களை என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி போன்ற நடைமுறையிலிருந்து பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தெலுங்கானா அரசாங்கத்தை வலியுறுத்துகிறது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.