இந்தியா

பள்ளி மாணவரின் புகாரால் சிக்கிய நபர்... மரத்தை வெட்டியதற்காக ரூ.62,075 அபராதம்!

பள்ளி மாணவரின் புகாரால் சிக்கிய நபர்... மரத்தை வெட்டியதற்காக ரூ.62,075 அபராதம்!

webteam

மரம் ஒன்றை வெட்டியதற்காக ரூ.62,075 அபராதம் செலுத்தியிருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர். சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட பள்ளி மாணவரின் புகாரின் எதிரொலியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பலரும் அந்த மாணவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது வீட்டின் அருகே 40 வயதுடைய சந்தோஷ் ரெட்டி என்பவர் வேப்ப மரத்தை வெட்டுவதை கண்டுள்ளார். அடிப்படையில் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள அந்த மாணவர், மரம் வெட்டப்படுவதைக் கண்டதும் தெலங்கானா வனத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 5364-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். மாணவரின் புகாரின் மீது வனத்துறை உடனடி நடவடிக்கை எடுத்து, மரம் வெட்டியவருக்கு 62,075 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

"அதிகாலை 4 மணி இருக்கும், அப்போது பள்ளி மாணவர் ஒருவர் எங்களது கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அதிகாலையில் மரம் வெட்டும் சத்தம் கேட்டு எழுந்ததாகவும், மரங்கள் வெட்டப்பட்டு வாகனத்தில் ஏற்றப்படுவதாக தகவல் கொடுத்தார். அழைப்புக்கு பதிலளித்த ஊழியர்கள், எனக்கு தகவல் தெரிவித்தனர், நானும் சிறுவனுடன் பேசினேன். ஆனால், சிறுவன் தனது பெயர் மற்றும் பிற விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இருப்பினும் தான் பசுமை படைப்பிரிவு (Green Brigades) அமைப்பின் உறுப்பினர் என மாணவன் கூறினார்" என்று ஹைதராபாத் வனத்துறை அதிகாரி சி வெங்கடையா கவுட் தெரிவித்துள்ளார்.

மாணவரின் தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், சந்தோஷ் ரெட்டி என்பவர் எந்த வித அனுமதியும் பெறாமல் மரங்களை வெட்டியது தெரியவந்தது. பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய வனத்துறையினர் அனுமதியில்லாமல் மரத்தை வெட்டியதற்காக 62,075 ரூபாய் அபராதம் விதித்தனர்.

தெலங்கானா மாநிலத்தின் கு ஹரிதா ஹராம் திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் உறுப்பினர்களாக கொண்ட `பசுமை படைப்பிரிவுகள்’ உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களின் வேலை மரக்கன்றுகளை பாதுக்காப்பது.