மாரடைப்பு மரணங்கள் முகநூல்
இந்தியா

தெலங்கானா | நீதிமன்ற வளாகத்திலேயே சரிந்து விழுந்து வழக்கறிஞர் மாரடைப்பால் மரணம்! வீடியோ

தெலங்கானாவில் ஹைதராபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் 45 வயதான நாகேஸ்வர ராவ் என்ற வழக்கறிஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், தெலங்கானாவில் ஹைதராபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் 45 வயதான நாகேஸ்வர ராவ் என்ற வழக்கறிஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சிங்கரேணி மண்டலத்தில் உள்ள கேட் கரேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பரசா ஆனந்த நாகேஸ்வர ராவ். 45 வயதான இவர், வழக்கறிஞராக உள்ளார்.

இந்த நிலையில், ஹைதராபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில், நேற்று காத்திருப்போர் அறையில் அவர் அமர்ந்திருந்தபோது திடீரென மார்பில் வலி ஏற்பட்டது. அவரது அசௌகரியத்தைக் கண்டதும், முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் உடனடியாக நீதிமன்ற ஊழியர்களுக்குத் தெரிவித்தார். இதன் பின்னர், ஊழியர்கள் அவரை நாற்காலிகளில் படுக்க வைத்து முதலுதவி செய்தனர்.

ஆனால் அவரது நிலை மிகவும் மோசமாகியது. அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனைக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்திற்கு மாரடைப்புதான் காரணம் என்று தெரியவந்துள்ளது. பிப்ரவரி மாத தொடக்கத்தில், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் 66 வயதான ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை வாதிட்டுக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.