தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பிரஜா பவனில் ‘பால பரோசா’ மற்றும் ‘பிரணாம் டே கேர்’ ஆகிய திட்டங்களை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு 50 கோடி மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ” இந்த அரசு உங்களுக்காக செயல்படுகிறது என்பதை காட்டுவதற்காகவே இந்த திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். மாற்றுத் திறனாளிகள் ஒருவரை ஒருவர் மணக்கும் போது அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். அதேசமயத்தில், மாற்றுத் திறனாளி ஒருவரை மணக்கும் போதும் அதே தொகை வழங்கப்படும். மேலும், அரசு வேலைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய இடம் வழங்கி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ” பிரணாம் திட்டத்தின் மூலம் முதியவர்களை ஆதரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இனி பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10% முதல் 15% வரை பிடித்தம் செய்து, அதை நேரடியாக அவர்களுடைய பெற்றோரின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்த முடிவு செய்திருக்கிறோம். பெற்றோர்களை கைவிடுபவர்களை நாமே வழிக்குக் கொண்டுவர வேண்டும். பெற்றோர்களுக்கு உபயோகப்படாதவர்கள், சமூகத்திற்கும் பயன்படமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.